ஸ்ரீரங்கத்திற்கென்று ஒரு நீண்ட புராண கதை இருப்பதுபோலவே தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. என்றாலும் அவை பற்றிய உண்மை நிலை தெளிவாகக் கிடைக்கப்பெறவில்லை. பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், கோவிலின் தல வரலாற்று நூலான கோவில் ஒழுகு ஆகியவற்றில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த மன்னர்களின் வரிசை குறிப்பிடப்பட்டுள்ளது. விபீஷணனால் கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ரங்க விமானத்தை மையமாகக்கொண்டு இத்திருக்கோவில் சோழ மன்னர்களால் எழுப்பப்பட்டுள்ளது. தருமவர்ம சோழன் என்பவனால் முதன்முதலில் இக்கோவில் கட்டப்பட்டது என்று புராணங்கள் குறிப்பிட்டாலும், வரலாற்றில் இப்பெயர் கொண்ட சோழன் இருந்ததற்கான சான்று இல்லை. ஆதித்த சோழன் காலத்தில் இருந்து, சோழ மன்னர்கள் தொடர்ந்து இந்த கோவிலுக்கு திருப்பணிகளைச் செய்துவந்துள்ளனர் என்பதை ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். என்றாலும் அதற்கான வரிசை கிரமத்தில் மன்னர்களின் வரலாறும் இன்றுவரை கிடைக்கவில்லை. கோவில் ஒழுகு நூல் மட்டுமே இக்கோவிலின் வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்டுள்ளது.
கி.பி. 823-ஆம் ஆண்டில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாத முனிகள் என்ற ஆச்சாரியார் அவர்களால் திருவரங்கம் திருக்கோவில் திருவிழா, வழிபாட்டு முறைகள் ஆகியன முதன்முதலாக வகுக்கப்பட்டன. அதன் பின்னர் கி.பி. 1070 முதல் 1120 வரை இராமானுஜரால் இக்கோவில் நடைமுறைகள் செம்மையாக திருத்தம் செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்டன. கி.பி. 1178-ஆம் ஆண்டுமுதல் கி.பி. 1218-ஆம் ஆண்டுவரை திருவரங்கம் கோவிலை மூன்றாம் குலோத்துங்கன் நிர்வகித்தான்.
கி.பி. 1223 முதல் கி.பி. 1225 வரை கங்கர் கள் படையெடுத்தபோது, திருவரங்கம் கோவில் அவர்களின் கட்டுப்பாட்டில் சென்றது. அதன்பின்னர் கி.பி 1216-ஆம் ஆண்டு சுந்தரபாண்டிய மன்னன் கங்கர்களை வென்று திருவரங்கம் கோவிலை மீட்டான் என வரலாறு சுட்டுகிறது. அவர்களைத் தொடர்ந்து, போஸர்கள் எனப்படும் ஒய்சாளர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது அவர்களும் இக்கோவிலுக்கு பல வருவாய்களை வகுத்துத்தந்தனர். குறிப்பாக அரங்கநாதர் கோவிலுக்குள் இன்று நாம் காணும் வேணுகோபாலன் சன்னதி ஒய்சாளர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். மதுரையை ஆண்ட சடாவரம சுந்தரபாண்டியன் இக்கோவிலில் பல கட்டடங்களை கட்டியிருக்கிறான்.
மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் போர்ச்சுகீசியத்தைச் சார்ந்த மார்கோபோலோ இக்கோவிலுக்கு வந்துள்ளார். கி.பி. 1311-ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களின் படையெடுப்பு தெற்குப் பகுதியில் விரிவடைந்தது. பாண்டியர்களின் ஆட்சித்திறம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் பாண்டியர்களின் தலைநகரமான மதுரை இஸ்லாமியர் களின் ஆளுகைக்குச் சென்றது.
அதன் தொடர்ச்சியாக, திருவரங்கம் கோவிலுக்குள் இஸ்லாமியப் படையினர் நுழைந்தனர்.
கோவிலின் விலை உயர்ந்த பொருட்களையும், கலைப் பொருட்களை யும், கடவுள் சிலை களையும் மாலிக்காபூர் என்னும் படைத் தலைவன் டில்லிக்குக் கவர்ந்து சென்றான். சில நாட்களுக்குப் பின்னர் கடவுள் சிலைகள் மீண்டும் வடிக்கப்பட்டு அரங்கநாதர் கோவிலில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/amuthu-2025-12-04-12-56-33.jpg)